சுமந்திரன் சாணக்கியன் இருவரையும் கனடா, பிரிட்டன் பேச்சுக்கு அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பேச்ச நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் எம்.பி அமெரிக்கப் பேச்சுக்களை முடித்துவிட்டு திரும்பும் வழியில் தங்களது வெளிவிவகார அமைச்சு அலுவலகங்களுக்கு வருகை தந்து அங்குள்ள உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலை நடத்தும் படி கனடாவும் பிரிட்டனும் அழைத்துள்ளன.

சுமந்திரன் குழுவினரின் அமெரிக்கப்பயணம் முடிவான சமயத்தில் கொழும்பிலுள்ள கனடா மற்றும் பிரிட்டிஷ் தூதுவர்கள் கொழும்பிலுள்ள கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தனைத் தொடர்பு கொண்டு இந்த அழைப்பை விடுத்தனர்.

சுமந்திரனின் வருகையின் போது அவருடன் சாணக்கியனையும் இணைத்துக் கொள்ளுமாறு மேற்படி இரு தூதரகங்கள் சார்பிலும் இழைப்பு முன்வைக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது.

இதனையடுத்து இரா. சம்பந்தன், தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசா, துணைத்தலைவர் செல்வராஜா, பதில் பொது செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் ஆகியோர் இந்த அழைப்புக் குறித்து தமக்குள் கலந்துரையாடிய பின்னர் அதனையேற்ற சந்திப்புக்களில் ஈடுபடுமாறு சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் வழிகாட்டல் வழங்கினர் எனவும் அறிய வந்தது.

தற்போது அமெரிக்காவில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் கூட்டமைப்பின் மூவர் குழுவில் சுமந்திரன் தவிர்ந்த மற்றிருவரும் அமெரிக்கப் பேச்சுக்களை முடித்துக் கொண்டு இலங்கை திரும்புவர். சுமந்திரன் மட்டும் அமெரிக்காவிலிருந்து கனடா பயணமாவார். அங்கு அவருடன் சாணக்கியன் எம்.பி இணைவார் எனத் தெரிகின்றது.

எதிர்வரும் 23ம் திகதி ஒட்டாவில் கனடிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும், அதற்கு இரண்டு நாள் கழித்து 25ம் திகதி லண்டனில் பிரிட்டிஷ் வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுடனும் சுமந்திரன்- சாணக்கியன் குழு பேச்சுக்களில் ஈடுபட்ட பின்னர் கொழும்பு திரும்பும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply