அரசு ஆட்சிக்கு வரும்போது பலமாய் இருந்த அரச ஊழியர்கள் இன்று சுமையாகி விட்டனர்! சபா குகதாஸ்

2022 நிதியாண்டிற்கான பாதீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதி அமைச்சர் பசில் ராஐபக்ச அரசாங்க ஊழியர்கள் இந்த நாட்டிற்கு சுமையாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். உண்மையாக இது வேதனையான வார்த்தை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இதே ராஐபக்ச அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரச ஊழியர்கள் அவர்களுக்கு பலமாக இருந்தார்கள்.

ஆனால், இன்று ராஐபக்ச ஆட்சியாளர்களின் தீர்க்க தரிசனம் இல்லாத செயற்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக மாறியதால் அரச ஊழியர்கள் தற்போது ராஐபக்ச அரசாங்கத்திற்கு சுமையாக மாறிவிட்டனராம்.

உண்மையில் இந்த நாட்டின் சகல நிர்வாக துறைகளின் செயற்பாட்டிற்கும் அரச ஊழியர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாகும். அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் மதிக்கப்பட வேண்டியது.

உதாரணமாக சுகாதாரத்துறை, கொரோனாத் தாக்கத்தின் போது மிக அர்ப்பணிப்பாக தங்களை தியாகம் செய்து கடமை ஆற்றியமையால் தான் நாடு பெரும் அவலத்தில் இருந்து தப்பிப் பிழைத்தது.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும் பக்கபலமாக இருக்கும் படைத்துறை கூட அரசாங்க ஊழியர்கள் என்பதை நிதி அமைச்சர் மறந்து விட்டாரோ அல்லது உண்மையாக அவர்களும் சுமையாக மாறிவிட்டார்களா?

இந்த நாட்டில் உள்ள சகல துறைசார் ஊழியர்களும் நாட்டிற்கு மிகப் பெறுமதியானவர்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை இன்னொரு தரப்பிற்கு சுமத்துவது அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுத்தியுள்ளது.

ஆட்சியாளர்கள் வாழ்க்கைச் சுமையை மக்கள் மீது தாங்கமுடியாத அளவிற்கு ஏற்றிவிட்டதனால் இன்று சம்பள பிரச்சினை கோரி தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

இந்த நடவடிக்கை அரசுக்கு கசப்பாக மாறியதால் அரச ஊழியர்கள் ராஐபக்ச அரசாங்கத்திற்கு சுமையாக மாறி விட்டனர்.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு இன்று எவ்வாறு அரச ஊழியர்கள் சுமையாக மாறினார்களே நிச்சயமாக நாளை இந்த நாட்டு மக்களும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சுமையாக மாறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தர் கைது!

Leave a Reply