கொரோனா பரவல் தாக்கத்தை எதிர்க்கட்சிகள் புரிந்துக்கொள்ளவில்லை! பவித்ரா வன்னியாராச்சி

உலக நாடுகளை ஸ்தம்பிதமடையச் செய்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலானது தேசிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளவில்லை என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நூறு வருடங்களுக்கு பின்பு ஏற்பட்ட உலக தொற்றுக்கு நாம் இன்று முகங்கொடுத்துள்ளோம். வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தரப்பினர் முதலாவதாக இந்த பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளனர்.

முப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய அரச ஊழியர்கள் இரண்டாவது அணியாக இருந்து இந்த பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.

வியாபாரிகள், விவசாயிகள் என அனைவரும் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பங்காற்றியுள்ளனர்.

அதன் பிரதிபலனாக இன்று நாம் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையை வெற்றிக்கொண்டு நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, தேசிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

2019ஆம் ஆண்டு நவம்பரம் மாதம் 16 ஆம் திகதி 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததற்கு அமைவாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டம் அப்போதைய நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் சமர்ப்பிக்கப்பட்டது.

அவர் அன்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போது கூட கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு நாம் முகங்கொடுத்திருந்ததுடன், அந்த சந்தர்ப்பத்தில் 18,075 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர். அதுமட்டுமன்றி 65 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போதைய அரசாங்கத்தின் 2ஆம் ஆவது வரவு செலவுதிட்டம் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை வரை, 530,709 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர். அது மட்டுமன்றி 13,884 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்திருந்தனர்.
இந்த உலக தொற்றானது, தேசிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை எதிர்க்கட்சிகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

உலக நாடுகள் இந்த கொரோனா தொற்றிலிருந்து மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான உபாயங்களை வகுத்து வருகின்றன என அவர் தெரிவித்தார்.

சுமந்திரன், சாணக்கியன் வெளிநாட்டு பயணம் தொடர்பில் கருத்துக்கூற விரும்பவில்லை! சம்பந்தன்

Leave a Reply