
இலங்கை மத்திய வங்கி தங்க இருப்பு தொடர்பில் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை, சீனா – இலங்கை உறவு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்கள், சீன வெளிவிவகார அமைச்சரின் வருகையை முன்னிட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வகுத்த புது வியூகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி போன்ற விடயங்களை மையப்படுத்தியே இன்றைய நிஜத்தின் நிழலில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
இலங்கையின் தற்போதைய நிலைக்கு யார் பொறுப்பு என்பதில் அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
எல்லாவற்றுக்கும் காரணம் ஜனாதிபதி கோட்டாபய தான் என்றும், அவரது தவறான முடிவுகளும், தவறான நிர்வாகம் மற்றும் வழிநடத்தலுமே, நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
குறிப்பாக, பசுமை விவசாயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த முடிவு தான் விவசாயத்துறையில் ஏற்பட்டிருக்கின்ற வீழ்ச்சிக்கு காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தி, ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டைக் கூறிய ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.
தற்போதைய நிலைக்குக் காரணமானவர் என்று குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகி வருபவர்களில் ஒருவர் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
தமது பசுமை விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, விவசாய அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
அத்துடன், விவசாய அமைச்சரே தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கும், நெருக்கடிகளுக்கும் காரணம் என்று அமைச்சர்கள் சிலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
எனினும், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தமது செயலாளர்களின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முனைகிறார்.
வெளியக ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொண்டதால் தான், விவசாய அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர் என்று அவர் நியாயப்படுத்தியிருக்கிறார்.
இறுதியாக விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த பேராசிரியர் உதித் ஜயசிங்க ஆற்றல் கொண்டவராக விளங்கினார் என்றும், ஆனால் கடைசியில் அவரும் வெளிப்புற சக்திகளின் வலைக்குள் விழுந்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
வெற்றியைக் கொண்டாட பலர் இணைவார்கள் . ஆனால், தோல்விக்குப் பொறுப்பேற்க யாரும் முன்வர மாட்டார்கள் . இத்தகைய நிலையையே ஜனாதிபதி கோட்டாபயவும், விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவும் தற்போது எதிர்கொண்டுள்ளனர்.
இதுவொரு புறமிருக்க, இறக்குமதி செய்யாத உரத்திற்கு ராஜபக்ஷ அரசாங்கம், 6.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சீனாவிடம் இழந்துள்ள நிலையில் ‘சீனா எமது உயிர்த் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புக்கள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாகூசாமல் கூறியுள்ளார்.
தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சீனாவை அரவணைக்கின்றார் என்று மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தப்புக்கணக்குப் போட்டுவிட வேண்டாம். ஏனெனில் ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்தால் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கியிருப்பது வழக்கமான ஒன்றே.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இறப்பர் மற்றும் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் இந்தக் கூற்று மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி’ இதன் ஓர் அங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இதன்போது 65 எனக் குறிப்பிடப்பட்ட ‘இலங்கை-சீன நட்புறவு படகோட்டப் போட்டி’க்கான நினைவு டீ-சேர்ட் ஒன்றினை வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீக்கு பரிசளித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, ஜனாதிபதியின் மரியாதைக்குரிய பிரதமர் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் வாரிசு அரசியல் முக்கியத்துவம் பெற்றதோடு, அடுத்த தலைவருக்கான அங்கீகாரமும் நாமலுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மஹிந்தவுடன் இணைந்து நாமல் வகுத்த இந்த புது வியூகம் கோட்டாவை ஓரங்கட்டுவதாக அமைந்த அதேவேளை, மஹிந்தவின் உரை, சீனாவின் ஆதரவுடன் தான் இலங்கையில் இனி ஆட்சி அதிகாரம் நடக்கும், ராஜபக்ஷ குடும்பம் தான் எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சரை அன்புடன் வரவேற்கிறேன். அவரை எங்களின் மிக நெருங்கிய நண்பராக வரவேற்கிறோம். வரலாற்று ரீதியாக இலங்கையர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு அரசின் பிரதிநிதியாகவும் அவரை நாங்கள் வரவேற்கிறோம்.
நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே சீன அரசாங்கம் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்ததாக சாட்சிகள் உள்ளன.
சீனா நமது உயிர்த் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புக்கள் நேர்ந்ததில்லை. அதனால் நமது நாடுகள் எப்போதுமே மிகவும் சாதகமான கொடுக்கல் வாங்கல்களை செய்துகொண்டிருக்கின்றன.
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி மிகவும் மதிப்புமிக்க செய்தியை அனுப்பினார்.
‘உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளுங்கள். அது சுதந்திரத்திற்கான வழி.’
நாம் அப்பாதையைக் கடைப்பிடித்தோம். இன்று உங்கள் நாடும் முழு உலகமும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
அதேபோன்று 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் பிரேரணையை முன்வைத்த காலமும் எனக்கு நினைவிருக்கின்றது. பெரிய வல்லரசாக சீன அரசு எங்களுக்காக முன்நின்றது. அது எமது நாடு போன்று ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்காக சீனா செய்த மாபெரும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.
உங்கள் நாடு கொரோனா தொற்று நோயை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. விரைவில் தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு தைரியம் அளித்தனர். முதல் சுற்றிலேயே உங்கள் சீன தடுப்பூசியை நாங்கள் நம்பியிருந்தோம்.
அந்தத் தருணத்தில் எமது ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எமது சார்பாக செய்த தியாகம் எமது மக்களுக்கு பெரும் பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.
அத்தகைய நண்பரின் எதிர்கால வளர்ச்சி குறித்து நாம் மகிழ்ச்சியுடன் பார்த்திருக்கின்றோம். சீன அரசாங்கமானது எமக்கு போன்றே உலகிற்கு அந்நாடுகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து உதவி செய்கிறது. நிபந்தனைகளை விதித்து தலையிடும் கொள்கை சீனாவிடம் இல்லை. எங்களைப் போன்ற நாடுகள் அத்தகைய கொள்கையையே எதிர்பார்க்கின்றன.
இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காகவே துறைமுக நகரமொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம்.
இதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெற்ற ஒத்துழைப்பை நினைவுகூர்வதுடன், சீன அரசாங்கத்துடனான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உங்கள் வருகையை நாம் காண்கிறோம் என பிரதமர் மஹிந்த தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டின் வசமிருந்த தங்கத்தின் கையிருப்பில் அரைவாசிக்கும் அதிகமான தங்கம் மத்திய வங்கியால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், பொருளியல் நிபுணருமான ஹர்ஷ டி சில்வா, விபத்திற்குள்ளாகியிருக்கும் பொருளாதாரம் என்ற விமானத்தை சுமுகமாகத் தரையிறக்கி பயணிகளைக் காப்பாற்றுவதா? அல்லது அவ்விமானத்தைக் கற்பாறையுடன் மோதுவதற்கு அனுமதிப்பதா? என்பதே தற்போதுள்ள கேள்வியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியால் கடந்த ஆண்டின் இறுதியில் காணப்பட்ட உத்தியோகபூர்வ இருப்பு தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்தரவுகளின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 382.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தின் இருப்பு, டிசெம்பர் மாதம் 206.8 மில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 175.4 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த நவம்பரில் 382.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தை முழுதாகவோ அல்லது பகுதியளவிலோ விற்பனை செய்வதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருக்கின்றதா? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தற்போது மத்திய வங்கியால் புதிய தரவுகள் வெளியிடப்பட்டமையைத் தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
‘நான் ஏற்கனவே கூறியது சரியான விடயமாகும். நாட்டின் வசமிருந்த தங்கத்தின் கையிருப்பில் அரைவாசிக்கும் அதிகமான தங்கம் மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. 382 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தின் இருப்பு தற்போது 175.4 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
அதேவேளை பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட 10 பில்லியன் யுவான்களை கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து மத்திய வங்கி தெளிவுபடுத்தவில்லை’ என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
‘இந்த விமானம் விபத்திற்குள்ளாகிவிட்டது. தற்போது இவ்விமானத்தை கடலை அண்மித்த பகுதியில் மிகவும் சுமுகமாகத் தரையிறக்கி, பயணிகளைக் காப்பாற்றப்போகின்றோமா? அல்லது மிகவும் மோசமான தரையிறக்கத்தால் இந்த விமானம் கற்பாறையில் மோதுவதற்கு அனுமதிக்கப்போகின்றோமா? என்பதே இப்போது எம்மத்தியில் இருக்கின்ற ஒரே கேள்வியாகும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை ஒட்டுமொத்த நாடும் உணவின்றித் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், மத்திய வங்கி எதிர்வரும் 18 ஆம் திகதி பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் டொலர் கொடுப்பனவை மீளச்செலுத்தவிருக்கின்றது. ஏனெனில் சிலர் தமக்கு பெருந்தொகையான இலாபம் கிடைக்கக்கூடிய வகையில் உயர் கழிவிற்கு இந்த பிணைமுறிகளைக் கொள்வனவு செய்திருக்கின்றார்கள்.
ஆகவே இந்த பிணைமுறிகளின் பயனாளிகள் யார் என்பதை மத்திய வங்கி வெளிப்படுத்த வேண்டும். இக்கொடுப்பனவு செலுத்தப்பட்டவுடன் அதன் பயனாளிகள் தொடர்பான விபரங்களும் முழுமையாக கணக்காய்வு அறிக்கைகளும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
தங்க இருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது மட்டுமல்ல டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என்று பல விடயங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.
அமைச்சர்களை நீக்கியும், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தியும் தன் மீதான குற்றச்சாட்டை ஜனாதிபதி திசை திருப்ப முற்பட்டாலும் மக்கள் தீர்ப்பு வழங்கும் கால கட்டம் வரும் போது நிச்சயம் பொறுப்புக் கூறியேயாக வேண்டும்.
[embedded content]





