பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் உட்பட சாதனையாளர்கள் கௌரவிப்பு.

பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் உட்பட சாதனையாளர்கள் கௌரவிப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி)

பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் 2024 முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை நடைபெற்றது.

பாடசாலையின் கலாசார மண்டபத்தில் அதிபர் க. கமலராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் T. உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் நிதி அனுசரணை வழங்கிய அபயம் அறக்கட்டளையின் தலைவரும் வைத்தியருமான K. பார்த்தீபன், தொழிலதிபர்களான V. யோகேஸ்வரன் மற்றும் S. மங்கலேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கி வரும் அபயம் அறக்கட்டளை பிரதிநிதிகள் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

இதன்போது பாடசாலைக்கு தவறாமல் வருகை தந்து சிறந்த வருகைப்பதிவைப் பெற்ற மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்கள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்குறிப்பாக மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவரும் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.

மேலும், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்ற 14 மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற 3 மாணவர்கள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரிவில் இருந்து கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 03 மாணவர்கள் ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், பாடசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சிறந்த ஆசிரியர்களும், ஆரம்பகாலம் முதல் சேவையாற்றி அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள நூலக உதவியாளரும் நீண்டகால சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்

நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பெற்றோர் சார்பிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவன் டி. அபிஷேக் சார்பிலும் அனுபவப் பகிர்வுகள் இடம்பெற்றன.

சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் இந்நிகழ்வு, ஏனைய மாணவர்களுக்கும் கல்வி மற்றும் இணைப்பாடவிதானத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான உந்து சக்தியாக அமைந்தது.

Leave a Reply