
தனது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத தந்தையொருவர், தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.
களுத்துறை – வெலிபன்ன பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த நாகராஜா ரஞ்ஜன் (வயது-37) என்ற தந்தை ஒருவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,
‘மூன்று நாட்கள் வீட்டில் உணவு இருக்கவில்லை. பிள்ளைகளுக்கு ஏதாவது உணவுக்கு தேடி வருவதாக கூறி, கணவர் சென்றார். அவர் வீட்டிற்கு மீண்டும் வருகைத் தராததை அடுத்து, வீட்டிலிருந்த நாற்காலிகளை விற்பனை செய்து, பிள்ளைகளுக்கு உணவு செய்துக்கொடுத்தேன்.
உயிரிழந்தது எனது கணவர். நாங்கள் திருமணம் செய்துக்கொண்டு 14 வருடங்கள். 12 வயதுக்கு குறைவான 4 பிள்ளைகள் எனக்கு உள்ளார்கள். மூன்று மகன்களும், ஒரு மகளும் எனக்கு உள்ளனர்.
நாங்கள் தெமுவத்த மற்றும் நெபட ஆகிய பகுதிகளிலிருந்து 9 மாதங்களுக்கு முன்னர் தொழில் தேடி, வெலிபென்ன பகுதிக்கு வருகைத் தந்தோம்.
தனது கணவருக்கு நிரந்தர தொழில் இருக்கவில்லை. கூலித் தொழில் செய்து, அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்க்கையை கொண்டு சென்றோம்.
3,500 ரூபாவிற்கு வாடகைக்கு பெற்றுக்கொண்ட ஒரு அறையொன்றிலேயே தாம் வாழ்ந்து வந்தோம். நிரந்தர பதிவு இல்லாமையினால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை.
தனது கணவர் வெலிபன்ன பகுதியிலுள்ள காணியொன்றை துப்பரவு செய்யும் குத்தகையை பெற்றுக்கொண்ட போது, அதற்கான பணம் உரிய வகையில் கிடைக்கவில்லை.
அதன்பின்னர் தனது கணவருக்கு எந்தவொரு தொழிலும் கிடைக்கவில்லை. கடந்த மூன்று நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமையினால், தனது கணவர் மனம் தளர்ந்திருந்தார். பிள்ளைகளுக்கு ஏதாவது கொண்டு வருகின்றேன் என கூறி சென்றார்.
ஆனால், உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால், கணவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தற்போது நானும், எனது பிள்ளைகளும் தனியாகி விட்டோம். பிள்ளைகள் சிறுவர்கள் என்பதனால், எனக்கு வேலைக்கு செல்ல முடியாது. எனது பிள்ளைகள் மேலும் நிர்க்கதியாகி விட்டார்கள்’ என மனைவி கண்ணீருடன் தனது நிலைமையினை கூறியுள்ளார்.
வெலிபென்ன சட்ட வைத்திய அதிகாரி நிஹால் ஜயநெத்தி முன்னிலையிலேயே அவர் இந்த வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





