வன்முறையில் முடிந்த இசை நிகழ்ச்சி: ஆறு பேர் கைது..!

ஹிங்குராக்கொடை, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

திவுலங்கடவல ஜனாதிபதி கல்லூரி மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் இடையே கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த இரண்டு பாடகர்கள் கலந்து கொள்ளாத காரணத்தால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இசை நிகழ்ச்சி பாடகர்கள் குழு பங்கேற்புடன் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் விளம்பரப்படுத்தியதோடு, 1,000 மற்றும் 2,500 ரூபாவுக்கு டிக்கெட்டுகளை விற்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

எனினும், இசை  நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் இசை நிகழ்வில் பங்கேற்க திட்டமிடப்பட்ட இரண்டு பாடகர்கள் சமூகமளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. 

அதன்படி, அறிவிப்பாளர் அதிகாலை 1.30 மணியளவில் இசை நிகழ்ச்சி முடிவடைவதாக அறிவித்த நிலையில், ஆத்திரமடைந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட நாற்காலிகள் உட்பட சொத்துக்களையும், இசைக்குழுவினரின் இசைக்கருவிகளையும் தாக்கி சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *