தொடர் உணவு ஒறுப்பு போராட்டம் – ஆளுநர் அலுவலகம் முற்றுகை!

இந்திய மீனவர்களாலும், இழுவைமடி தொழிலாலும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்கள், உணவு ஒறுப்பு போராட்டதுக்கு செல்லும் நிலைக்கு துறை சார்ந்த அதிகாரிகள் தள்ளி விட்டனர் என வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இந்திய மீஎனவர்களாலும், இழுவைமடித் தொழிலாலும் யாழ் மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடற்தொழில் உபகரணங்களையும் இழந்து, உயிர்களையும் இழந்துள்ளனர்.

இதனால் தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். இதனை அறிந்த அரசியல் பிரமுகர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் போராட்ட இடத்துக்கு வருகை தந்து வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

வாக்குறுதிகளை அடுத்து நாம், மகஜர்களையும் கையளித்து போராட்டங்களை நிறைவுக்கு கொண்டு வந்தோம். ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்டச் செயலகம், இந்திய துணை தூதரகம் ஊடக மகஜர்களை வழங்கினோம்.

ஒரு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்று வரை எமக்கு பதில் கிடைக்கவில்லை. பிரச்சினைக்கு தீர்வு வழங்கத்தான் நாட்கள் எடுக்கும் என்றால், கொடுத்த மகஜருக்கு பதில் கிடைக்கவில்லை. உங்கள் மகஜர் கிடைத்தது, இது பற்றி ஆராய்கின்றோம் என்ற பதில் கூட எமக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இவர்களை நம்புவது வீண் என்று தொன்றுகின்றது. நாம் புதிதாக ஒன்றையும் கேட்கவில்லை. இலங்கை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் இழுவை மடி தடைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் கோரினோம். ஆகவே முன் அறிவித்தல் இல்லாமல் ஆளுநர் செயலகம் உட்பட பல அலுவலங்களை முடக்கி உணவு ஒறுப்பு போராட்டதில் ஈடுபடுவோம்.

இது தவிர இங்கே இழுவை மடி தொழிலை மேற்கொள்ள முடியும் என நாரா நிறுவனம், ஆய்வு குறிப்பு ஒன்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இதில் நன்கு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கிலோ இறால் பிடிப்பதற்கு, 18 கிலோ கிராம் மீன் குஞ்சுகளை அழிக்கும் தொழிலை செய்வது தான் இழுவை மடித் தொழில். இது பற்றி உண்மையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

நாம் யாரையும் சந்தித்து பேசுவது பலனளிக்காது. இரண்டு நாட்டின் வெளிவிவகார அமைச்சும் இராஜதந்திர பேச்சுக்களை மேற்கொண்டு, பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே நாம் விரும்புகின்றோம்.- என்றனர்.

Leave a Reply