
நியூயார்க், மார்ச் 11
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள படையெடுப்பினை முன்னிட்டு, ரஷ்ய படை வீரர்களுக்கு மரணம் போன்ற பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில், விதிகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், குடிமக்களுக்கு எதிராக நம்பகதன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்து உள்ளது.





