நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் தொடரும் ஆபத்து! – போக்குவரத்து பாதிப்பு

 

நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் வாகன போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பல இடங்களில் மண்மேட்டுடன் கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து வீழ்ந்ததில்  இவ்வீதியூடான போக்குவரத்து  தடைப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது பொலிஸார், பொது மக்கள் மற்றும்  அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி, போக்குவரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில், குறித்த வீதியில் இருபுறமும் பல இடங்களில்  மண்மேட்டுடன் கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக நுவரெலியாவில் பல இடங்களில் பிரதான வீதியில் சரிந்து விழுந்த மண் மற்றும் கற்பாறைகளை அகற்றி வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று நுவரெலியாவிலிருந்து வரும் மார்க்கத்தில் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வழியும் மூடப்பட்டிருப்பதால் நுவரெலியா – கண்டி மார்க்கம் கடந்த ஒன்பது நாட்களாக மூடப்பட்டுள்ளது. 

கடந்த 28ஆம் திகதியிலிருந்து புசல்லாவை நகருக்கு மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே குடி நீர் விநியோகமும் சீரடைந்துள்ளது.

 

Leave a Reply