வயல் காணியை பாதுகாக்கச் சென்ற விவசாயின் உயிரைப் பறித்த யானை – கந்தளாயில் அதிகாலை துயரம்

திருகோணமலை – கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திபுர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான விவசாயி ஒருவர் இன்று (03) அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், ஜெயந்திபுர பகுதியில் அமைந்துள்ள ஜனசவி குளம் அருகே இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த விவசாயி, தனது விவசாயக் காணியை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள், மனித–யானை மோதல்களைத் தடுக்க நிரந்தர தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply