ஊடகத்துறை பிரதி அமைச்சர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு!

ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்தின அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (02.07.2026) ஊடகத்துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் எம். பி. எம். பைறூஸ், பொதுச் செயலாளர் ஷம்ஸ் பாஹிம், பொருளாளர் கியாஸ் ஏ புஹாரி, உப தலைவர்களான ஷிஹார் அனீஸ், ஜெம்சித் அஸீஸ் மற்றும் முன்னாள் தலைவி புர்கான் பி. இப்திகார் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் ஊடகத்துறையின் சமகால விவகாரங்கள், எதிர்கால மேம்பாடு, ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், பின்வரும் முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. 

1. கருத்துச் சுதந்திரமும் புதிய சட்டமூலமும்: பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்கி, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் கருத்துச் சுதந்திரத்திற்கும், ஊடகவியலாளர்களின் சுயாதீனப் பணிக்கும் ஆபத்தாக அமையலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், PTA முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், புதிய சட்ட வரைபுகளின் போது ஊடகவியலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

2. தகவல் அறியும் ஆணைக்குழுவை வலுப்படுத்தல்: தகவல் அறியும் ஆணைக்குழுவை (RTI) மேலும் வலுப்படுத்துவதோடு, அதற்குத் தேவையான ஆளணி மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும் என போரத்தினால் வலியுறுத்தப்பட்டது.

 3. ஊடகவியலாளர் பட்டய நிறுவனம்: அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர் பட்டய நிறுவனத்தை (Chartered Institute of Journalists) நடைமுறைப்படுத்தும் போது, அனைத்து ஊடக அமைப்புகளினதும் கரிசனைகளையும் கருத்துகளையும் உள்வாங்கிச் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

4. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை மேம்பாடு: முஸ்லிம் சேவை அதிக வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு சேவையாக இருந்தபோதிலும், அங்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும், நீண்டகாலமாக சேவையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் கோரப்பட்டது. மேலும், ரமழான் போன்ற காலங்களில் விளம்பரங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இடையில் சமநிலை பேணப்பட வேண்டும் என்றும், முஸ்லிம் சேவைக்குப் பங்களிப்புச் செய்யும் கலைஞர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாதுள்ள கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது. இக்கொடுப்பனவு விவகாரம் குறித்து தான் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இதற்குரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

5. இளம் மற்றும் பெண் ஊடகவியலாளர் பயிற்சித் திட்டங்கள்: நாட்டின் ஊடகத்துறையை மேம்படுத்த SLMMF முன்னெடுக்கவுள்ள இளம் ஊடகவியலாளர் பயிற்சித் திட்டம் மற்றும் பெண் ஊடகவியலாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இவற்றுக்கு ஊடகத்துறை அமைச்சினதும், அரசாங்க தகவல் திணைக்களத்தினதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.

6. செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டு நெறிமுறைகள்: அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் போது, நெறிமுறைகளுடன் கூடிய (Ethical AI Use) பயன்பாட்டை ஊடகவியலாளர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களை அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது குறித்து அமைச்சு கண்டிப்பாகக் கவனம் செலுத்தும் என பிரதி அமைச்சர் கூறினார்.

7. பாடசாலைகளில் ஊடகக் கழகங்கள்: தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஊடகக் கழகங்களை (Media Clubs) உருவாக்குவதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்ற முஸ்லிம் மீடியா போரம் தயாராக இருப்பதை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

8. அசிதிசி (Asidisi) புலமைப்பரிசில் திட்டம்: அமைச்சினால் வழங்கப்படும் அசிதிசி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கற்கைநெறிகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமை குறித்து கவலை வெளியிட்ட பிரதி அமைச்சர், தகுதிவாய்ந்த ஊடகவியலாளர்களை இதற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

9. ஊடகவியலாளர் நலன்புரித் திட்டங்கள்: ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம், வாகனக் கொள்வனவுக் கடன் வசதிகள் மற்றும் ஏனைய நலன்புரித் திட்டங்களை அமைச்சு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இறுதியாக, ஊடக விவகாரங்கள் குறித்து நேரடியாகத் தன் கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு நன்றி தெரிவித்த பிரதியமைச்சர்  கலாநிதி கௌசல்யா ஆரியரத்தின, எதிர்காலத்தில் ஊடக அமைச்சுடன் இணைந்து போரமும் ஏனைய ஊடக அமைப்புகளும் செயலாற்றுவதை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.  

அத்துடன், ஊடகத்துறை சார்ந்த கரிசனைகளை தனக்கு நேரடியாகத் தெரியப்படுத்தும் பட்சத்தில், அவற்றுக்குரிய உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர தான் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

Leave a Reply