திருகோணமலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் நவீன இருதய சிகிச்சை வளாகம்: 8 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் ரூ.2,403 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள நவீன 8 மாடி இருதய சிகிச்சை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதிதாக அமைக்கப்படவுள்ள இருதய சிகிச்சை வளாகத்தில் அதிநவீன இருதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வசதிகள், அவசர இருதய சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), நவீன Cath Lab வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் எக்ஸ்-ரே சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், மருத்துவ நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட வசதிகளும் இந்த வளாகத்தில் இடம்பெறவுள்ளன.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், கிழக்கு மாகாண மக்கள் இருதய நோய்களுக்கான அவசர மற்றும் சிறப்பு சிகிச்சைகளைப் பெறுவதற்காக தூர மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டம் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் அருகிலேயே மேம்பட்ட இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ள இது வாய்ப்பை ஏற்படுத்தும்.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதி/கடன் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply