(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் மாகாண தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தலைமைத்துவ இலக்கியப் போட்டிகளில் ஆற்றுகைத் தொடர்பான அம்பாறை மாவட்ட மட்ட தமிழ் மொழி மூலமான போட்டிகள் நேற்று (16) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.
கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். தெளபீக் தலைமையில் இப்போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் குறிப்பாக முஸ்லிம்களது இஸ்லாமிய கீதம், பொல்லடி, கலைத்தா குழு, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், காவடி உள்ளிட்ட பல்வேறு ஆற்றுகை சார்ந்த போட்டிகள் இடம்பெற்றன.
நடுவர்களாக மருத்துவர் முபாரிஸ், எஸ்.றபீக், வி.ரி.சகாதேவராஜா, எம்.அமீர், ராஜகவி றாஹில்,ஜெய.புவனேஸ்வரி ஆகியோர் பணியாற்றினர்.
போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் தத்தமது கலைத்திறன்களையும் பாரம்பரிய ஆற்றுகைகளையும் வெளிப்படுத்தினர்.
பல்வேறு கலை வடிவங்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்த இந்நிகழ்வு, கிழக்கு மாகாணத்தின் பல்வகைப்பட்ட தமிழ் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிக்கொணரும் நிகழ்வாக அமைந்தது.








