இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம்

(பாறுக் ஷிஹான்)

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

இளைஞர்கள் மற்றும் மூத்த அனுபவசாலிகளை இணைத்துப் பயணிக்கத் தயார்: கட்சித் தலைவர் அர்க்கம் முனீர் பேச்சு



“இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (16) மாலை மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக நீதிக்  கட்சியின் தலைவரும், தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மருதமுனை இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தலைமை உரையாற்றிய சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர் உரையாற்றுகையில்:

“சமூக நீதிக் கட்சி என்பது வெறுமனே இளைஞர்களுக்கான கட்சி மட்டுமல்ல, மாறாகச் சமூகத்தின் சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இயக்கம். மக்களிடம் காணப்படும் பிரச்சினைகள் வெறும் பேச்சுப்பொருளாக மாத்திரம் நின்றுவிடாமல், அவற்றைச் சரியான முறையில் அரசியல் மயப்படுத்தித் தீர்வுகாண வேண்டும். இதற்கு எமது கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.அரசாங்கத்தின் நேர்மறையான விடயங்களை ஆதரிப்பது, தவறு நடைபெறும் போது காத்திரமான விமர்சனங்களை முன்வைப்பது என்பது எமது அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல; 100 வருடங்களுக்கு முன்னர் எமது கொள்கை வழிகாட்டிகளின் அரசியல் நிலைப்பாடாகவும் அதுவே இருந்தது”

அந்த வகையில், மருதமுனைக் கிராமத்தில் காணப்படும் பிரதான பிரச்சினைகளான கடலரிப்பு மற்றும் மேட்டுவட்டைக் காணிப் பிரச்சினைகள் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுத் தீர்வுகள் காணப்பட வேண்டும். மூத்த அனுபவசாலிகளையும் இளைஞர்களையும் இணைத்துப் பயணிப்பதன் ஊடாக எமது பிரதேசப் பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பகிரங்க பொதுக் கூட்டத்தின் மருதமுனையின் பொதுப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் சமூக நீதிக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனப் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சமூக நீதிக் கட்சியின் தவிசாளர்  நஜா முஹம்மத், சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமட், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹசனலி, தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா, டிஜிட்டல் ஊடகச் செயலாளர் ஸப்ரீன் அஹமட் மற்றும் உயர்பீட உறுப்பினர் ராகுல் ஸஜீத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply