அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 2004 கலைப்பிரிவு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிப்பு: பாடசாலைக்கு கட்டடக் கூரை அன்பளிப்பு

– பியந்த –

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (19.09.2026) கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

“அறிவை விதைத்து அறிவொளி ஏற்றும் ஆசான்களை வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயிலிலிருந்து பேண்ட் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் வரவேற்பு நடனம், சிவதாண்டவம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

பாடசாலையின் முன்னாள் அதிபர் கே. இரத்தினவேல் மற்றும் ஓய்வுபெற்ற, தற்போது கற்பித்துவரும் ஆசிரியர்களான J.R. டேவிட் அமிர்தலிங்கம், V. கிருபாகரன், திருமதி சோதிமலர் தங்கவடிவேல், S. தேவசிகாமணி, T. ஜெயராஜ், M. ஜெசிம், K. ஜெயந்தன் ஆகியோரும், மறைந்த ஆசிரியர் S. சோமசுந்தரம் சார்பில் அவரது குடும்பத்தினரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஆசிரியர்களின் கல்விச் சேவையையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் மாணவர்களின் அனுபவப் பகிர்வுகளும், ஆசிரியர்களின் உணர்வுபூர்வமான ஏற்புரைகளும் இடம்பெற்றன. இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

இதேவேளை, 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களின் ஒருங்கிணைப்பில் கல்லூரிக்குத் தேவையான கட்டடம் ஒன்றுக்கு கூரை அமைக்கப்பட்டு, அது மாணவர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

தாம் கல்வி கற்று பல ஆண்டுகள் கடந்த பின்னரும் தங்களது ஆசிரியர்களை நேரில் கௌரவித்ததுடன், தாம் கல்வி கற்ற பாடசாலையின் தேவைக்கும் பங்களிப்பு செய்துள்ள 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களின் இச்செயற்பாடு, இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக பிரதேச மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply