ஞானசார தேரருக்கு ஆதராவான காலிமுகத் திடல் போராட்டத்தினை கரிசனையோடு கையாளுகின்ற அரசாங்கம், தமிழ் மக்களின் நிதியான போராட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 26 ஆவது வாரமாக இன்று (16.10.2026) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்துக்கள் மீதும், அவர் காண்பித்த உணர்வுகள் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் ஏமாற்றத்தோடு வீதிகளில் காத்திருக்கின்றனர்.
இங்கே நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றவர்களை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணிகளை பறிகொடுத்துவிட்டு தவித்து வருகின்ற மக்கள், தேசிய மக்கள் சக்தியினர் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி வாக்களித்திருந்தனர்.
குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் உணர்வுபூர்வமான கருத்துகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாகியும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அவர்களின் காணிகள் விடுவிக்ப்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். தொடர் போராட்டங்களில் கொட்டு மழையிலும் வெய்யிலிலும் தொடர்ந்தும் போராடுகின்ற இந்த மக்களை இந்த அரசாங்கம் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
ஜனாதிபதி அநுரவை நம்பி வாக்களித்த இந்த மக்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற ஆளுநர், அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற யாருமே கண்டு கொள்வதாக தெரியவில்லை.
ஆனால், நிதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைளை முன்வைத்து கண்டியில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முன்றலை வந்தடைந்து சில மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதியின் செயலாளர் வந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடுகின்றார்.
போராடுகின்றவர்களின் கோரிக்கை சாதகமாக பரீசிலீக்கப்படும் என்று ஆசுவாசப்படுத்துகின்றனர்.
அரசாங்கத்தின் இவ்வாறான இரண்டு விதமான நடைமுறைகளினால் அதிப்தி அடைந்துள்ள, காணிகளுக்காக போராடுகின்ற தமிழ் மக்கள் இந்த அரசாங்கமும் தங்களை மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடாத்துவதாக ஆதங்கப்படுகின்றனர்.
காணிகளுக்காக போரர்டுகின்ற வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு என்பது அசாத்தியமான ஒன்றல்ல, கட்டம்கட்டமாக வேணும் தங்களின் காணிகளை விடுவிக்குமாறே வலியுறுத்துகின்றனர்.
ஆனால், கடந்த அரசாங்கத்தின் இறுதிக் காலங்களில் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட காணிகளைக்கூட விடுப்பதற்கான உத்தரவுகாளை வழங்காமல் இந்த அரசாங்கம் காலத்தினை கடத்துகின்ற நிலைதான் காணப்படுகின்றது.
எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவரக்ள் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து கட்டம் கட்டமாகவேனும் அவர்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.





