ஊர்காவற்றுறை செருக்கன் சந்தியிலிருந்து செல்லப்பா கடை வரையிலான 780 பிரதான வீதியின் எஞ்சிய பகுதி இதுவரை முழுமையாகப் புனரமைக்கப்படாமையால், அப்பகுதி மக்களும் வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், வீதியின் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அசமந்தமாகச் செயற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் குறித்த வீதியை விரைவாகப் புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பரிந்துரைக்கு அமைவாகத் தீவகப் பகுதிகளிலுள்ள பல வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, வேலணை வங்களாவடி சந்தியூடாகப் புளியங்கூடல் சந்தியிலிருந்து ஊர்காவற்றுறைக்குச் செல்லும் 780 பிரதான வீதியின் பெரும்பகுதி புனரமைக்கப்பட்டது.
கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட இவ்வீதியின் அபிவிருத்திப் பணிகளின்போது, வீதியை அகலப்படுத்துதல் மற்றும் அடித்தளத்தை அமைத்தல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் நிறைவுசெய்யப்பட்டன.
எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், வீதியின் ஒரு பகுதியைப் பூரணமாகப் புனரமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் வேலணை மற்றும் ஊர்காவற்றுறைப் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக 780 பிரதான வீதி விளங்குகின்றது.
இரு பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இவ்வீதியில், சுமார் இரண்டு கிலோமீற்றர் வரையான பகுதி இதுவரை சீரமைக்கப்படாமல் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், பாடசாலை மாணவர்கள், வங்கிச் சேவைகளைப் பெறச் செல்லும் பொதுமக்கள், அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள், நாளாந்தக் கூலித் தொழிலுக்காகப் பயணிப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வீதியைப் புனரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் தற்போதைய ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், வீதியின் அடித்தளப் பணிகள் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள பகுதியில் காப்பெற் இடுவதன் மூலம் புனரமைப்புப் பணிகளை நிறைவுசெய்ய முடியும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, மக்களின் நாளாந்தப் போக்குவரத்துத் தேவைகள், நோயாளர்களின் அவசரப் பயணங்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, 780 பிரதான வீதியின் எஞ்சியுள்ள பகுதியை விரைவாகப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, வீதிப் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





