பஷில் ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபரிடம் சென்ற முக்கிய ஆவணங்கள்

 

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான வழக்குக் கோவைகள் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு  அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பஷில் ராஜபக்ஷவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், பஷில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு கோட்டை நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக இன்டர்போல் ஊடாகச் சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதவான் அறிவுறுத்தியிருந்தார்.

குறித்த நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் மற்றும் விசாரணைத் தகவல்களைக் கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை, பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply