வடிகான், பாலங்களின் குறைபாடுகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.! விடுக்கப்பட்ட கோரிக்கை

சம்மாந்துறைப் பகுதியில் முறையாக நிர்மாணிக்கப்படாத வடிகான்கள் மற்றும் சீரமைக்கப்படாத பாலங்களால் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். நயீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வு கடந்த 15ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

மீயன்னா சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைக்கப்பட்டுள்ள வடிகான் முறையாக நிர்மாணிக்கப்படாததால், அது குன்றும் குழியுமாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

எனவே, குறித்த வடிகானின் குறைபாடுகளை உடனடியாகச் சீரமைத்து, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, அல் அர்சத் பாடசாலை வீதியில் இரண்டு பாலங்களை நிர்மாணித்துச் சீரமைக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

குறித்த பகுதியில் அண்மையில் பொதுமகன் ஒருவர் விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில், குறித்த பாலங்களின் குறைபாடுகளைச் சீரமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், சலாம் பள்ளிவாசல் வீதியிலும் இதேபோன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அப்பகுதியின் குறைபாடுகளையும் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான உட்கட்டமைப்புக் குறைபாடுகளைத் தாமதமின்றிச் சீரமைத்து, பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உறுப்பினர் ஏ.சீ.எம். நயீமின் கோரிக்கையாக அமைந்தது.

Leave a Reply