முல்லைத்தீவுக்கு அண்மையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கனமழை தொடரக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
நேற்று (20) வடக்கு மாகாணத்திற்கு வடகிழக்குத் திசையில் நிலைகொண்டிருந்த வளிமண்டல கீழடுக்கு காற்றுச் சுழற்சி, இன்று (21) காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காற்றுச் சுழற்சி எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் நகராமல், மிகக் குறைந்த வேகத்தில் நகர்ந்து தற்போது முல்லைத்தீவுக்கு அண்மையில் நிலைகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று இந்தக் காற்றுச் சுழற்சி அரபிக் கடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் தற்போது மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் 36 மணித்தியாலங்களுக்கு தற்போதைய பகுதியில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் காற்றுச் சுழற்சி நிலைகொண்டிருப்பது வானிலை ரீதியாக ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும் என பேராசிரியர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பெய்துவரும் கனமழை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
சில பகுதிகளில் மிகக் கனமழை பதிவாகக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய, வடமத்திய, வடமேல், மேல், ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்புகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த காற்றுச் சுழற்சியின் நகர்வு மற்றும் அமைவிடம் தொடர்பில் கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாகத் துல்லியமான கணிப்புகளை மேற்கொள்வதில் வானிலை மாதிரிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அண்மையில் உருவான இந்தக் காற்றுச் சுழற்சி, பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக் கடலை அடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மத்திய வங்காள விரிகுடாவை நோக்கி நகர்ந்து, தமிழகத்தின் சென்னை பகுதியை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அதன் பின்னர் தெற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்ட இந்தச் சுழற்சி, அரபிக் கடலுக்குள் நுழையும் எனக் கணிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது முல்லைத்தீவுக்கு அண்மையில் நிலைகொண்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இவ்வாறான எதிர்பாராத நகர்வுகள், எல் நினோவின் தாக்கத்தினால் உருவாகக்கூடிய கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் காற்றுச் சுழற்சி நீடிப்பதால், அது தொடர்ந்து மறைவெப்ப சக்தியை உள்வாங்குவதுடன், அதன் மையத்தை நோக்கிய காற்றுக் குவிதலும் அதிகரிக்கக்கூடும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
எனவே, தற்போதைய காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வு மற்றும் தீவிரம் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியமாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.





