இலங்கைக்கு அண்மையில் நிலவும் வளிமண்டலத் தளம்பல் நிலை, அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கப் பிரதேசமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் இன்று (21) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், மேற்குத் திசையிலிருந்து தென்மேற்குத் திசையூடாக மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானித்து, அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக, பல மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (21) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி நிலவரத்திற்கு அமைய, பின்வரும் பகுதிகளில் உள்ள மக்கள் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எந்நரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து வீழ்தல் மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





