சகோதரருடன் சென்ற இராணுவ வீரரின் உயிரைப் பறித்தது எது? அம்பாறையில் சோகம்

அம்பாறை புறநகர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை புறநகர் பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 6ஆம் திகதி இரவு, உயிரிழந்தவர் தனது சகோதரருடன் குறித்த குளத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு திடீரென வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது.

இதன்போது, யானையிடமிருந்து தப்பிப்பதற்காக இருவரும் ஓடிய நிலையில், எதிர்பாராதவிதமாக இராணுவ வீரர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ரவீந்திர குமார என்ற இராணுவ சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அம்பாறையில் அமைந்துள்ள கொண்டவட்டுவான் இராணுவ முகாமில் பணியாற்றி வந்ததுடன், சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் மாலை விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தனது சகோதரருடன் மீன்பிடிப்பதற்காகச் சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி மற்றும் அம்பாறை பிரதேச முதலாம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் உத்தரவுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பிரதம பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, வனவிலங்குத் திணைக்களத்தின் அம்பாறை கள அலுவலகத்தைச் சேர்ந்த கீஹன் சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply