-கிரிஷாந் மகாதேவன் –
நற்பிட்டிமுனை – 01, பிள்ளையார் கோயில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தில், நேற்றைய தினம் (22) காலை 10.00 மணி முதல் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பசுவாமி விசேஷ சக்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேஷர் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பிரதம குரு ‘வித்யா சாகரன்’, ‘மதுர சாதகர்’ சிவஸ்ரீ கணேஷ் திவிசாந்த குருக்கள் மற்றும் பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயம், ஸ்ரீ தர்மசாஸ்த்ர யாத்திரை பேரவையின் குருசுவாமி ஜெ.ஜெசிந்திரகுமார் ஆகியோரின் தலைமையில் இவ்விசேஷ பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பமாக காலை 10.00 மணியளவில் சுவாமி ஐயப்பனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து பக்திபூர்வமான ஐயப்பன் பஜனை திவ்ய நாம சங்கீர்த்தனம் இடம்பெற்றது.
தொடர்ந்து மதியம் 12.00 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்று, பூஜையின் நிறைவில் அன்னதான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்புண்ணிய நிகழ்வில் ஐயப்ப சுவாமிமார்கள் மற்றும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு எம்பெருமான் ஐயப்பசுவாமியின் திருவருளைப் பெற்றுக்கொண்டனர்.










