இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலச் செலவுகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் செலவினங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு வாடகை விமானப் பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு செலுத்த வேண்டிய 96.22 மில்லியன் ரூபா (சுமார் 9.6 கோடி ரூபா) நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
குறித்த நிலுவைத் தொகையானது 2014ஆம் ஆண்டு மாலைதீவு, சீஷெல்ஸ், இத்தாலி, நேபாளம் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பயணங்களுடன் தொடர்புடையது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக 2024ஆம் ஆண்டில் 110.51 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தச் செலவினம் 4.39 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் தலா 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக கடந்த 26 மாதங்களில் 31.17 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அதிகளவிலான அரச செலவினங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் அரச நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.




