சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகன்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சீருடை வடிவங்கள் தொடர்பில் இதுவரை ஆராயப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடையை மாற்றுவதால் மாத்திரம் அவரது நடத்தை அல்லது பொலிஸ் கடமைகளை முன்னெடுக்கும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகத்தில் அமைதியைப் பேணுவதுடன், பொதுமக்களுடன் வலுவான உறவைக் கட்டியெழுப்பக்கூடிய பொலிஸ் படையணியொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போதிய அறிவும் திறமையும் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உருவாக்குவதுடன், குறிப்பாகத் தேவையான தகைமைகளையும் ஆற்றல்களையும் கொண்ட விசாரணை அதிகாரிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



