வெளிநாடுகளுக்கு ‘பனங்கள்ளு’ ஏற்றுமதி செய்யலாமா? யாழில் வர்த்தக அமைச்சர் கேள்வி

யாழ்ப்பாணத்தின் பனை சார் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு, முன்மொழிவுகளை தாருங்கள் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற உள்ளூர் உற்பத்தி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் திறமையான பலர் இருக்கின்றனர்.

தொழில் நுட்பம் ஊடாக இளைஞர்களும் வளர வேண்டும். நாடும் வளர வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை பாடசாலை தகவல் தொழில் நுட்ப கல்வி மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.

அதற்கு ஏற்ற வகையில் கணனி ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர இளைஞர்களை தொழில் நுட்பட ரீதியிலும்,உள்ளூர் ஏற்றுமதி மூலமும் முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

அதற்கான உதவிகளை வர்த்தக அமைச்சு வழங்கும்.ஒரு கிராமத்தில் 50 உள்ளூர் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான பதிவுகளை நாம் மேற்கொண்டு தருவோம்.

இவ்வாறு உருவாக்கப்படும் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கி,வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பிப்போம்.

உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எழுதப்படும்.

அத்துடன் அந்நிய முதலீடுகளை பெறுவதற்கு புலம் பெயர் தேச உறவுகளை ஒன்றிணைக்கவுள்ளோம்.

இதன் ஆரம்ப திட்டமாக நுவரெலியாவில் ஒரு வகையான கோப்பி விதைகளை உற்பத்தி செய்து,அதனை ஒரு கிலோ கிராம் ஆயிரம் ரூபா என்ற விலையில் கொள்வனவு செய்து ஜப்பான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம்.

மேலும் யாழ்ப்பாணத்தின் பனம் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்போம்.

அதே போன்று பனம் கட்டி உள்ளிட்ட பனை சார் உற்பத்திக்கான முன்மொழிவுகளை எம்மிடம் தாருங்கள்.அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

Leave a Reply