
46 கீழ் ஒன்று தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்டிய காலக்கெடுக்களையும் வழங்கியது.
அதன்படி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகதிற்கு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்தது.
அத்தோடு 48 ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையையும் 49ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும் 51ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் குறித்த ஆணைக்கு இணங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியுள்ளதுடன் இந்த குழு ஜெனிவாவை தளமாக கொண்டு செயற்படும் என்றும் அறிவித்துள்ள்ளது.





