மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, நட்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலக மத்திய கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
அதன்படி, இழப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான நஷ்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு கோறளைபற்று வடக்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 66 பயனாளிகளுக்கு 15 இலட்சம் ருபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், வாகரை பிரதேச சபை தவிசாளர் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு, நஸ்டஈட்டு காசோலை பெற்று கொண்டவர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் தமது நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






