வவுனியா நீதிமன்றத் தடை உத்தரவுடன் வீடு வீடாகத் திரியும் பொலிஸார்!

மாவீரர் வாரத்தை நினைவு கூருவதற்குப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றதத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காகச் சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிஸார் வீடு வீடாகச் சென்று வருகின்றார்கள்.

வவுனியா பொலிஸ் நிலையப் பிரிவுக்குள் 20.11.2021 தொடக்கம் 29.11.2021 வரை மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிஸாரால் வவுனியா நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனை ஆராய்ந்த மன்று குறித்த நிகழ்வு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிஸாரால் பெயர் குறிப்பிட்டப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவுக் கட்டளையை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் சி.கஜேந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர் சு.தவபாலன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பெயர் குறிப்பிட்ட சிலரது முகவரிகள் தவறாகப் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளமையால் குறித்த நபர்களைத் தேடி வவுனியா பொலிஸார் வீடு வீடாகத் திரிந்து வருகின்றனர்.

பின்னர் தொலைபேசி அழைப்பெடுத்து அவர்கள் நிற்கும் இடங்களுக்குச் சென்று குறித்த தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குறித்த தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்றபோதும் முகவரிகள் பிழையாக உள்ளன எனவும், பொலிஸாரால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளன எனவும் தடை உத்தரவைப் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply