மன்னாரில் கொரோனா மரணம் அதிகரிப்பு

மன்னாரில் களுத்துறை பகுதியை சேர்ந்த (66 வயது) பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் ரி.வினோதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 3 தினங்களாக மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் மன்னார் தாழ்வுபாட்டு பகுதியை சேர்ந்த மீன் பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் 61 பேரும் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் பேசாலை பகுதியைச் சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு கீழ்ப்பட்ட 30 பேர் குறித்த தொற்றாளர்களுடன் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மன்னாரில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.

களுத்துறையில் இருந்து மன்னாரிற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply