எங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவை- உறவுகள் கோரிக்கை

அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் எங்களுக்கு தேவையென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் எந்த இலங்கை நிறுவனங்களையும் நம்பவில்லை. மனித உரிமை உயர்ஸ்தானிகர் மிசால் பேச்லெட் மத்தியஸ்தராக்க விரும்புகிறோம்.

இதனை இலங்கை மனித உரிமை ஆணையம்  ஏற்றுக்கொண்டால், அவர்களின் கோரிக்கையை பற்றி யோசிக்கலாம்.

மேலும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

இந்த ஆணைக்குழு, அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாத்து, சிறந்த மனித உரிமை கலாசாரத்தை  நாட்டில் ஏற்படுத்துவதற்கே உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை.

இதேவேளை மே 2009 இல் 146,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு எங்கே இருந்தார்கள்?

மேலும் மட்டக்களப்பு, வவுனியாவில் தமிழர்கள் யாரும், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் இல்லை என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.

எனவே அரசியல் தீர்வு, மனித உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தற்போதைய சூழ்நிலையில் எங்களுக்கு தேவை” என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *