ஜே.வி.பி கட்சியினர் யாழில் கடந்த 13ஆம் திகதியன்று கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்தம் என்னும் பெயரில் நினைவேந்தல் நிகழ்வொன்றை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு ஜே.வி.பி கட்சியினர் கார்த்திகை வீரர்களை நினைவேந்த முடியுமெனில், நாம் ஏன் மாவீர்களை நினைவேந்த முடியாது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை மாவீரர் தினத்தைத் தடுப்பதற்காக நீதிமன்றிலே வழக்குத்தாக்கல் செய்யும் பொலிசார், ஏன் கார்த்திகை வீரர்களின் நினைவேந்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியதுடன், பொலிசாரின் இந்த பாரபட்சமான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை செய்யக்கோரி, முல்லைத்தீவு பொலிசார் 17 ஆம் திகதி மாங்குளம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அதற்மைய வழக்கை அராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளையை இன்று முல்லைத்தீவு பொலிசார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று கையளித்திருந்தனர்.
குறித்த தடைக்கட்டளையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று மாலை 5 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு பொலிசாரால் தடை உத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மதிக்கின்றோம்.
பொலிசார் இந்த விடயத்தில் ஒரு பாரபட்சமாக நடக்கின்றார்கள் மாவீரர் நாள் நிகழ்வை தமிழ் மக்கள் அனுஸ்டிக்கக் கூடாது என்ற நிலையில் பல நீதிமன்றங்கள் உடாக தடை உத்தரவினை பெற்று எல்லோருக்கும் வழங்கி வருகின்றார்கள்.
கடந்த 13 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் யாழ்ப்பாணத்தில் கார்த்திகை வீரர்கள் தினம் நினைவுகூர்ந்துள்ளார்கள் இதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல.
கார்த்திகை வீரர்கள் நினைவுதினம் என யாழில் வந்து நினைவுகூர முடியுமானால் எங்கள் மக்கள் ஏன் தங்கள் உறவுகளை எண்ணி மாவீரர்களை நினைவு கூரமுடியாது என்பது தான் என்னுடைய கேள்வி.
பொலிசார் தமிழ் மக்கள் தங்கள் உறவுனை நினைவு கூருவதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாடி சென்றவர்கள் ஏன் சிங்களவர்களை நினைவுகூருவதற்காக ஜே.வி.பியினர் செய்த நடவடிக்கை அல்லது செய்யப்போகின்ற நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கவில்லை.
பொலிசார் இந்த விடயத்தில் தமிழர்களுக்கு ஒரு நீதியாகவும் சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு நீதியாகவும் நடக்கின்றார்கள். இப்படியா பாராபட்சமான நடவடிக்கையினை செய்யவேண்டாம் என வலியுறுத்துகின்றேன்.
இதேவேளை, தற்போது நாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தங்களது கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
குறிப்பாக நாட்டினுடைய ஜனாதிபதி தன்னுடைய ஆட்சியில் சில தவறுகள் அல்லது பின்னடைவுகள் என்பதை ஒத்துக்கொண்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.
இது ஒருபுறமிருக்க ஒட்டுமொத்தத்தில் நான் ஒரு கருத்தை சொல்லுகிறேன். தெரியாதவர்கள் அல்லது நடத்த தெரியாதவர்கள் விட்டுவிட்டு ஒதுங்கவேண்டும் என்பதுதான் நான் இதுக்கு ஒட்டுமொத்தமாக சொல்லக்கூடிய பதில் எனத் தெரிவித்தார்.






