ஜனாதிபதியால் தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள விதம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து, அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி, தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, தொழி நிபுணர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் கபில ரோணுக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டமா அதிபர், பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவையின் பிரதிநிதிகள், இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் உட்பட 82 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தற்போது நியமித்துள்ள அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள விதம் அரசலமைப்புச் சட்டத்தின் 47 (1) (அ) மற்றும் (ஆ) ஆகிய சரத்துக்களுக்கு முரணானது என சட்டத்தரணி தர்சன வேரதுவகே மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் ஊடாக விதிக்கப்பட்டுள்ள வரையறை தாண்டி இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள மனுதாரர், இந்த நியமனங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதியின் முன்னர் நாட்டின் அமைச்சரவையின் செயற்பாடுகள் முற்றிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.






