
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே (கோபா குழு) இவ்விடயம் தெரியவந்தது.
சிரேஷ்ட மட்டத்தில் 18 வெற்றிடங்களும், மூன்றாம் நிலையில் 113 வெற்றிடங்களும், இரண்டாம் நிலையில் 121 வெற்றிடங்களும், முதல் நிலையில் 19 வெற்றிடங்களும் வேறு பதவியில் ஒரு வெற்றிடமும் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களினால் திணைங்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பதாகவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு பரிந்துரைத்தது.






