ஆயர்களின் அறிவிப்பை மீளப்பெறுமாறு பொ – பொ இயக்கம் நேரில் கோரிக்கை!

ஆயர்கள் பேரவையால் அறிவிக்கப்பட்டிருந்த, ‘போரில் இறந்தோருக்கான நினைவு கூரல்’ தொடர்பான கடந்த 20ஆம் திகதிய அழைப்பை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு, வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. – என்று, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

போரில் இறந்தோர் நினைவு தொடர்பான வடக்கு கிழக்கு ஆயர்களுடனான சந்திப்புத் தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், போரில் இறந்தோர் நினைவு தொடர்பில் வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை அண்மையில் வெளியிட்டுள்ள போரில் இறந்தோர் நினைவு எனும் தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கும் அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களாக இந்த விடயம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறுபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், சிவகுரு ஆதின முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகளும், கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் இணைப்பாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான ச.சிவயோகநாதனும், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகையும், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய நோயல் இமானுவேல் ஆண்டகையும், யாழ். மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையும் சந்தித்து, மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலில், மாவீரர் பெற்றோர்களினதும், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட பல்வேறு தரப்பினரதும் ஆதங்கங்கள், கவலைகள் மற்றும் கருத்துக்கள் என்பன ஆயர்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.
அதன்போதே, ஆயர்கள் பேரவையால் அறிவிக்கப்பட்டிருந்த, ‘போரில் இறந்தோருக்கான நினைவு கூரல்’ தொடர்பான கடந்த 20ஆம் திகதிய அழைப்பை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு, வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. – என்று, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply