பயன்பாடற்று காணப்படும் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம்!

வடக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் பயன்பாடற்று இன்றும் காணப்படுகின்றன. அதற்கு சான்றாக கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் சான்று பகிர்கின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வன்னேரிக்குளம் பகுதியில் வடக்கு மாகாண சபையினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுற்றுலா பகுதியே இது.

இன்று பயன்பாடற்று பற்றைகளால் சுழ்ந்தும், பராமரிப்பின்றியும் காணப்படுகன்றமையானது பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது.

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் 6 மில்லியன் நிதியில் குறித்த சுற்றுலா மையம் அமைக்கப்பட்டது.

கடந்த 27.05.2017 அன்று கரைச்சி பிரதேச சபையின் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்தின் பின்னர் படிப்படியாக சேதமடைய ஆரம்பித்த குறித்த சுற்றுலா மையமானது, இன்று முற்ற முழுதாக செயலிழந்து காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

அங்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட வீதியில் காணப்படும் பாலமும் சேதமடைந்து காணப்படுகின்றது. அதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் பாரிய நிதியில் அமைக்கப்பட்ட குறித்த அபிவிருத்தியானது திட்ட மும்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஆராயப்பட்டிருக்கவில்லை என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளாக வீதி, குடிநீர் திட்டம், தொழில்வாய்ப்புக்களிற்கான தொழிற்சாலைகள், பேருந்து தரிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் இன்றும் காணப்படும் நிலையில், திட்டமிடப்படாததும், மக்களிற்கு அத்தியாவசியமாக தேவைப்படாததுமான இவ்வாறான திட்டங்களையே வடக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுக்கின்றது.

இவ்வாறான வினைதிறனற்ற அபிவிருத்திகளால் மக்களின் கரங்களிற்கு சென்றடைய வேண்டிய பல்வேறு தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படாது நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மக்கள் விருப்பங்களையும், தேவைகளையும் அறிந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளாவது மக்களை நேரடியாக சென்றடைந்து, அவை பயன்மிக்கதாக அமைய வேண்டும் என்பதற்கு வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் எடுத்துரைக்கின்றது.

இவ்வாறு சேதமடைந்துள்ள சுற்றுலா அமையத்தினை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ள வுண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply