பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக பிரித்தி படேல் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் லிஸ் ட்ரஸ், பதவியேற்கவுள்ள நிலையில், அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தற்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இதுதொடர்பான தனது இராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
தன்னுடைய இராஜினாமா கடிதத்தை, பிரித்தி படேல் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ‘நம்முடைய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ்ஸை வாழ்த்துகிறேன். மேலும் நம்முடைய புதிய பிரதமரான அவருக்கு எனது ஆதரவை வழங்குவேன்.
லிஸ் முறைப்படி பதவி ஏற்றதும், புதிய உட்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டதும், பின்வரிசையில் இருந்து நாட்டிற்கும் விதம் தொகுதிக்கும் எனது பொதுச் சேவையைத் தொடர்வது எனது விருப்பம்’ என்று கூறியுள்ளார்.