முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பணம், நகை, தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் தங்களை அடையாளம் காணாதவாறு முகத்தை மூடிய நிலையில், வேலியை வெட்டி காணிக்குள் சென்று வீட்டு யன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்து விட்டு பெண்ணை சத்தமிட முடியாதவாறு வாய்க்குள் துணிகளை அடைந்து சித்திரவதை செய்து வீட்டில் இருந்து சுமார் 25 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்
கணவனை பிரிந்த நிலையில், தனது பிள்ளைகளை சிறுவர் இல்லத்தில் சேர்த்திருந்துவிட்டு, தனிமையில் வீட்டில் இருந்த பெண்ணிடமே கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
15 பவுண் நகை, 5 இலட்சம் ரூபா பணம், மற்றும் பெறுதியான தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணவனை பிரிந்த நிலையில் மழை வெய்யில் பாராது தனது பிள்ளைகளை படிப்பிப்பதற்காக கஸ்ரப்பட்டு விவசாயம் செய்துவரும் தான் சீட்டு பிடிப்பதனூடாகவும் சிறிது சிறிதாக சேகரித்த பணம் நகைகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த குறித்தபெண், அடுத்த நாள் சீட்டு எடுத்தவருக்காக கொடுப்பதற்கு வைத்திருந்த 5 இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு துன்பப்பட்டு உழைத்த எனது பணம் நகைகள் பறிபோயுள்ளதாகவும், ஆயிரம் ரூபாவுக்கு கூட வழியின்றி தான் இப்போது இருப்பதாகவும் கொள்ளையர்களை இனம்கண்டு எனது நகை பணத்தை எப்பிடியாவது மீட்டு தருமாறு பொலிசாரை கோரியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட இந்த மிரட்டலுடனான கொள்ளை சம்பவம் பாரிய அச்ச சூழலை தோற்றுவித்துள்ளதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
நேற்று தடையவியல் பொலிசார்கள், மோப்பநாய்கள் சகிதம் வந்து ஆய்வு செய்த நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.









