வவுனியா, ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள காணியொன்றை உழவியந்திரத்தின் மூலம் பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.
வாடகைக்கு அமர்த்தப்பட்ட குறித்த உழவியந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, இரு சிறுவர்களில் ஒருவன் திடீர் என கீழே தவறி வீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
எனினும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் முன்னமே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய கந்தலதன் கனிஸன் என்ற சிறுவனே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








