வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு இவ்வாரம் முதல் மூன்றாவது தடுப்பூசி! ஆ. கேதீஸ்வரன்

வடமாகாணத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசி (பைஸர்) வழங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,

கொரோனாத் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடவையாக பைஸர் தடுப்பூசி மேலதிகமாக இவ்வாரம் முதல் வழங்கப்படவுள்ளது.

மேற்குறிப்பிட்ட நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் அத் தடுப்பூசியைப் பெற்ற நாளிலிருந்து ஆகக்குறைந்து ஒரு மாத இடைவெளியின் பின் இத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வடமாகாணத்தில் யாழ் மாவட்டத்தில், யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

நோய் நிலைமையால் அல்லது அதற்கு பெற்றுக்கொண்ட சிகிச்சையினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயுடையவர்கள், உறுப்பு மாற்று (உதாரணமாக சிறுநீரகம், ஈரல் மற்றும் சுவாசப்பை) மற்றும் என்புமச்சை மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர்கள், புற்றுநோயுடையவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள், மண்ணீரல் தொழிற்பாடு குறைந்தவர்கள் அல்லது நோய்நிலையின் நிமித்தம் மண்ணீரல் அகற்றப்பட்டவர்கள், வைத்தியரால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களென பரிந்துரைக்கப்பட்டவர்கள் மூன்றாவது தடவை மேலதிக தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்னுரிமை உடையவர்களாவர்.

எனவே, மேற்குறிப்பிட்ட தேவையுடையவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை மற்றும் மருத்துவ அறிக்கையுடன் தமக்கருகிலுள்ள குறிப்பிடப்பட்ட வைத்தியசாலைகளில் இம்மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

யாழ். பல்கலையில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த தடையுத்தரவு!

https://www.facebook.com/Livesamugam

Leave a Reply