வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும் பகுதிகளில் மழை!

தற்போது உருவாகியுள்ள வளிமண்டல தளம்பல் நிலையானது எதிர்வரும் மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வாய்ப்பு உள்ளதாகவும், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலைவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம், காலி, இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும், மட்டக்களப்பு, கொழும்பு, – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, கண்டி, நுவரெலியா – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply