கோப்பாய் துயிலுமில்லம் அருகே மாவீரர் வார துப்புரவின்போது படையினர் பெரும் இடையூறு!

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக துப்புரவு பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நேற்று நடந்து கொண்டுள்ளனர்.

கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து, பெரும் இராணுவ முகாம் அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்துக்கு முன்பாகவுள்ள தனியார் காணியில் மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுகின்றமை வழமையாகும்.

தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அந்தக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர் தாமும் துப்புரவு பணியில் ஈடுபடுகின்றோம் என்றுகூறியவாறு துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டனர்.

அதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக ஒளிப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்

Leave a Reply