யாழ். தாவடி சந்தியில் விபத்தை ஏற்படுத்திய இலக்கத்தகடு இல்லாத இராணுவத்தின் பஸ்ஸை தம்முடைய பஸ் அல்லையென இராணுவத்தினர் மறுக்கின்றனர். அப்படியானால் ஒரு இலக்கத் தகடு இல்லாத பஸ் யாழ் நகரின் பல பகுதிகளுக்குள்ளும் பயணித்த நிலையில் அதனை பொலிஸார் ஏன் சோதனை சாவடிகளில் மறிக்கவோ சோதனையிடவோ இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ். சிறிதரன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,
செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி தாவடி சந்தியில் பாடசாலை மாணவியை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளை இலக்கத்தகடு இல்லாத இராணுவ பஸ் மோதியதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் அவரின் தந்தையும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய இராணுவ பஸ்ஸில் எந்த சைகை விளக்குகளோ ஒலி எழுப்பியோ இருக்கவில்லை. அத்துடன் பஸ்ஸின் முன்பக்கம், பின்பக்கம் என இரு பக்கங்களிலும் இலக்க தகடுகளும் இருக்கவில்லை.
இருந்தபோதும் இந்த பஸ் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதிவின்படி இராணுவ தலைமையக பதிவைக்கொண்டுள்ளது.
விபத்து நடந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர் இது தம்முடைய பஸ் அல்லவென தெரிவித்திருக்கின்றனர். ஆனால், இந்த பஸ்ஸிலே வற்றாப்பளை கண்ணகை அம்மன் என எழுதப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்த காலத்தில் மக்களின் இந்த பஸ்ஸை தம்மகப்படுத்திய இராணுவத்தின் இராணுவ தலைமையகத்தின் பெயரிலே வைத்திருந்த நிலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இலக்கத் தகடு இல்லாத இந்த இராணுவத்தின் பஸ் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியிலிருந்து கே.கே.எஸ். வீதியூடாக இணுவில் வரையும் பயணம் செய்துள்ளது. எந்த இடத்திலும் பொலிஸார் இந்த இலக்கத்தகடு இல்லாத பஸ்ஸை மறித்து சோதனையிடவில்லை. இவ்வாறு சென்ற பஸ்தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது – என்றார்.






