தேசிய பேரவை ஸ்தாபிப்பு யோசனை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

கொழும்பு, செப்.20

தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இந்த யோசனை இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல 9.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய அமர்வின் போது, ஒரு மணிநேரம், வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் கடந்த 14ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு வருகைதர முடியும்.

இதற்கமைய, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றுக்கு பிரவேசிப்பதற்கான விண்ணப்பங்களைwww.parliament.lkஎன்ற இணையத்தளத்தின் ஊடாகவும், 011 2777 473 அல்லது 011 2777 335 என்ற தொலைநகல் இலக்கங்கள் ஊடாகவும் அல்லது கடிதம் மூலமும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர் குழுக்கள், அரசின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply