தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை யைச் சூழவுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிமன்றக் கட்ட ளையை மீறி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டித்தும் நேற்றுக் குருந்தூர்மலையில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று மக்களால் முன் னெடுக்கப்பட்டது.
தண்ணிமுறிப்பு மற்றும் குமிழமுனையைச் சேர்ந்த மக்களால் நடத்தப்பட்ட இந்தக் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்தோர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளான 632 ஏக்கர் காணிகளை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் தமிழ் மக்களின் பூர்வீக வழிபாட்டிடத்தில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


குருந்தூர் மலையடிவாரத்தில் ஒன்றுகூடிய மக்கள் பதாகைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குருந்தூர்மலையில் மேற்குப் பகுதிக்குச் சென்ற மக்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜோன்சன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன், யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஒன்றியத்தினர் போன்றவர்களும் மக்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அங்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒளிப்படமும் எடுத்தனர்.





