22.09.1987
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகைபோடும் வேலையை ஆரம்பித்துவிட்டனர். முதல்நாள் இலட்சக் கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை.
இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில்கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கள் பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.
அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக்கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தை திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாள்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தையா கூறினார்.
இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களை தன் இளம் வயதில் சந்தித்தார். மட்டக்களப்பு மாவட்டத் தளபதி கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தை தகர்த்தவர்களுள் இந்த மதனும் ஒருவர். இந்த குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கியமாகப் பங்கெடுத்தவர்கள் வேறு யாருமல்ல, லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.
தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே திருச்செல்வம் என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொதுமக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. தமிழீழம் எங்குமே அஹிம்சைப்போர் தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருக்கிறது. திலீபன் ஒரு மகத்தான மனிதன்தான். இல்லையென்றால் அவன் வழியிலேயே இத்தனை மக்கள் சக்தியா…!
© © © © ©
வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத் தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள். ஈழமுரசு பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும்வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி குகசாந்தினி, சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள்.
மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அஹிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக்கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி, ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதைவடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.
இந்த எழுச்சியை, மக்களின் வெள்ளத்தை பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றிச்சுற்றிவட்டமிட்டுக் கொண்டிருந்தன இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.
புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல, அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஒரு சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக ஒரு சொட்டுநீர்கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாள்களை வெற்றிகரமாக முடித்தவர் என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக்கொண்டிருக்கிறார் திலீபன். அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன. வயிறு ஒட்டிவிட்டது.

நீரின்றி வாடிக்கிடக்கும் ஒரு கொடியைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை, பார்க்கமுடியவில்லை, பேச முடியவில்லை, சிரிக்க முடியவில்லை. தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப்போகிறது? முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சார்ந்த மாணவ, மாணவி கள் சனக்கூட்டத்தைப் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.
© © © © ©
பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள். ‘சிந்திய குருதியால் சிவந்த தமிழ் மண்ணில் சந்ததி ஒன்று சரித்திரம் படைக்க….. முந்திடும் என்பதால்… முளையிலே கிள்ளிட… சிந்தனை செய்தவர் சிறுநரிக் கூட்டமாய்… இந்தியப் படையெனும் பெயருடன் வந்தெம் சந்திரன் போன்ற திலீபனின் உயிரைப் பறித்திட எண்ணினால்… பாரிலே புரட்சி… வெடித்திடும்.. என்று வெறியுடன் அவர்களை… எச்சரிக்கின்றேன்…’’ மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்த கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது.
இன்று திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இரத்த அழுத்தம் – 80/50. நாடித்துடிப்பு – 140. சுவாசம் – 24.
.





