உணவின்மையால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்

கொழும்பு,செப் 22

அநுராதபுரம் மாவட்டத்தின் விளச்சிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், உணவு இன்மையினால் புதன்கிழமை மயக்கமடைந்து விழுந்துள்ளதாக இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறித்த பிரதேச செயலகத்தின் சித்தார்த்த மகா வித்தியாலயம், கிம்புலாவ காமினி வித்தியாலயம் மற்றும் ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களை தொடர்புகொண்டு வினவியதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேங்காய் துண்டுகளை பகலுணவாக கொண்டுவந்ததாக கூறப்படும் விடயத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும், 60 ரூபாவுக்கு பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்க முடியாது. எனவே உடனடியாக இது தொடர்பில் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரினார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மினுவாங்கொடை பகுதியில் உள்ள குறித்த பாடசாலையில் 15 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டதுடன், செய்திகளில் குறிப்பிட்டதைப்போன்று எந்த சம்பவங்ளும் இடம்பெறவில்லை என்றும் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் கேள்வியுற்றவுடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன்போது, மாணவர்கள் எவரும் அவ்வாறான பகலுணவை கொண்டுவந்த சம்பவங்கள் பதிவாகவில்லை என்று தெரியவந்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி, சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் பாடசாலையின் அதிபரை தான் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, மேற்படி விடயத்தை அவர் தெளிவுபடுத்தியதாக குறிப்பிட்ட அமைச்சர் அந்த தொலைபேசி உரையாடலை சபையில் ஒலிபரப்பினார்.

இதேவேளை, தானும் அதிபரை தொடர்புகொண்டதாக தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியினை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை திசை திருப்புவதற்கு சிலர் இவ்வாறாக தகவல்களை வெளியிடுவதாக கூறினார்.

Leave a Reply