அண்மைய நாட்களில் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் தரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு செய்தி மற்றும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் பல எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை அடுத்து, எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார்.
லிட்ரோ கேஸ் மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவற்றுக்கு இடையே லாபம் மற்றும் கூட்டுறவை அதிகரிக்க அதன் பியூட்டேன்-புரோபேன் கலவையில் ஏற்பட்ட அபாயகரமான மாற்றத்தைத் தொடர்ந்து, வாயு வால்வுகளில் கசிவு ஏற்படுவதாக குணவர்தன எச்சரித்தார்.
எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்காவின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல்
பணிப்பாளர் ஜானக பத்திரத்ன, அத்தகைய கூற்றுக்களை மறுத்துள்ளதுடன், எரிவாயுவின்
தரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு செய்தி மற்றும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவை பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும், நிறுவனத்துக்கும், அரசாங்கத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 6 மில்லியன் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள், பொதுமக்கள் வசம் இருப்பதாகத் தெரிவித்த ஜனக பத்திரத்ன, அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் தேசிய தர நியமங்களுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பன்னிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவையில்
உள்ள வீடொன்றில் நேற்று (25) காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
சமையலறை மற்றும் ஏனை அறைகளில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அச்சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை.
அதனால், உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






