
திரிபோஷாவில் அளவிற்கதிகமான எப்லொடொக்சின் அடங்கியுள்ளமை தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த விடயத்தில் என்னை மௌனமடையச் செய்வதற்கு முயற்சிக்கப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
அதே வேளை எவரேனுமொருவரது கவனக்குறைவினால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் விசேட சுற்றிவளைப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எவரேனுமொருவரது கவனக்குறைவினால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தொடர்ச்சியாக என்னை அமைதிப்படுத்துவதற்கோ அல்லது என்னை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி இந்த பிரச்சினையிலிருந்து என்னை நீக்குவதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
களுத்துறை தேசிய மருத்துவ ஆய்வுகூட அறிக்கைகள் 8 ஐ அடிப்படையாகக் கொண்டே நான் இந்த விடயத்தை வெளிப்படுத்தினேன்.
அந்த அறிக்கைகளிலுள்ள கருத்துக்களை நிரூபிக்கவும், கவனக்குறைவாக ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கும் நான் தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.
திரிபோஷா நிறுவனத்தினால் தாய்மாருக்கு வழங்குவதற்காக களுத்துறை தேசிய மருத்து ஆய்வுகூட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்கு விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா மாதிரிகளையே நாம் பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டிருந்தோம்.
திரிபோஷா நிறுவனம் அதன் தொழிற்சாலையிலிருந்து வழங்கிய திரிபோஷாவிலிருந்தே நாம் மாதிரிகளைப் பெற்றுக் கொண்டோம்.
நாம் தற்போது களுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள திரிபோஷா மாதிரிகளை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளோம். குறித்த பகுதியில் 150 திரிபோஷா மூடைகள் காணப்பட்டன.
இதனை விட அதிகமாக தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். எனவே எஞ்சிய தொகையை எந்தெந்த பகுதிகளுக்கு விநியோகித்துள்ளனர் என்பது எமக்கு தெரியாது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். – என்றார்.
பிற செய்திகள்




